ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

Veera Thamizhan (வீர தமிழன்)

போராட்டம் விற்பனைக்கு!

தற்போது தமிழ் ஊடகப்பிரிவில் மிகவும் மலினமான ஒரு கருத்தாடல் உண்டென்றால் அது விடுதலைப் போராட்டம் பற்றிய கருத்தாடலாகும்.

வீடு விற்பனைக்கு, காணி விற்பனைக்கு என்பதைப் போல விடுதலைப் போராட்டமும் விற்பனைக்குள்ளது என்று சொல்லுமளவுக்கு இப்போது கருத்தாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஒரு விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்கு சமூகப் பொறுப்பும், சமூக அக்கறையும், தன்னை ஒறுத்த அல்லது தன்னைக் கொடுத்து சமூகத்தை வாழவைக்க விரும்பும் தற்கொடைப் பண்பும், தற்துணிவும் இலட்சிய உறுதியும் அடிப்படைப் பண்புகளாக இருந்தன.

ஆனால் தற்போது, ஒரு கணணியும் அதில் தமிழ் எழுத்துருவும் இருந்தால் ஒரு அறையில் இருந்து கொண்டு தேவைப்பட்டால் ஒரு பியரையும் குடித்துக் கொண்டு போராட்டத்தை நடத்திவிடலாம் என்ற போலித்தனம் தலை தூக்கியிருக்கிறது.

நாலு பேருக்குத் துரோகிப்பட்டம் கொடுத்து, நாலு போராளிகளைப் பற்றி விமர்சனம் என்ற பெயரில் பொய்யும் புரட்டும் எழுதி வெளியிட்டால் அது தான் போராட்டத்தில் பங்கெடுப்பதற்கான தகுதி என்று பலர் நினைக்கிறார்கள்.
ஒரு தனி நபர் தான் சார்ந்த பிரிவுக்கு கட்டுப்படுவது, கீழ் பிரிவு மேல் பிரிவுக்கு கட்டுப்படுவது, சிறுபான்மை பெரும்பான்மைக்கு கட்டுப்படுவது தான் ஒரு விடுதலை அமைப்பினுடைய கட்டமைப்புத் தத்துவமாகும்.

ஒரு உட்கட்சி விமர்சனம் என்பது இந்தப் படிமுறையூடாக நடைமுறைப் படுத்தப்படுவதுதான் விடுதலைப் போராட்ட அமைப்புக்களின் மரபாகும். இந்த மரபை மீறி எந்த ஒரு போராளியாலும் (அவர் போராளியாக இருந்து கொண்டு) பொது இடங்களிலும் ஊடகங்களிலும் வைக்கப்படும் விமர்சனங்கள் விடுதலை அமைப்பின் கட்டுப்பாடுகளை மீறிய ஒன்றாகவும், காட்டிக் கொடுப்பாகவுமே கருத்தப்படுவது பொது வழக்கமாகும்.

ஆனால் இப்போது ஒரு பிரிவு இன்னொரு பிரிவை விமர்சிப்பதும், சக போராளிகளை தூற்றுவதும், அவர்களுக்குத் துரோகிப் பட்டம் கொடுப்பதும் சர்வசாதரணமான ஒன்றாகிவிட்டது. அதைவிடக் கொடுமை ஒரு விடுதலை அமைப்பின் கடிதத் தலைப்பை இலச்சினையை மோசடியாகப் பாவித்து போலி அறிக்கைகளை வெளியிடுவது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு மேடை போட்டு அரசியல் பேசியோ அல்லது கணணிகளின் முன்னால் அமர்ந்து கொண்டு தட்டச்சு செய்ததன் மூலமோ உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அந்த அமைப்பு 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் உயிர்க்கொடையாலும் அதைவிட அதிகமான போராளிகளின் இரத்தத்தாலும் பல இலட்சக்கணக்கான மக்களின் வியர்வையாலும் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மற்றொரு சிறப்பு அது ஒரு போதும் மக்களைவிட்டு அந்நியப்பட்டு பின் தளத்தில் இருந்து கொண்டு புரட்சியை, போராட்டத்தை தாயகத்துக்கு இறக்குமதி செய்ய நினைக்கவில்லை. அது மக்களோடு இருந்து மக்களை சிங்கள, பௌத்த பேரினவாத அடக்கு முறையில் இருந்து பாதுகாக்கப் போராடியது.

விடுதலைப்புலிகள் பலத்துடன் இருந்தவரை தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்க சிறீலங்கா அரசால் முடியாமலிருந்தது. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனித்த பின்பு இன்று தமிழர் தாயகம் அதிவிரைவாக பௌத்த சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மக்கள்புரட்சி, பின்தளப்புரட்சி, ஜனநாயகப புரட்சி என்றெல்லாம் வாய்ச்சவடால் விட்டவர்களால் இந்த பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கான ஒரு சிறு துரும்பைக்கூட முன் நகர்த்த முடியவில்லை.

போராட்டத்தின் சுமையை, வலியை வேதனையை அதிகம் சுமந்ந வன்னி மற்றும் வாகரைப் பகுதி மக்கள் தொடர்ந்தும் அவலத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் தாயக விடுதலைக்காக தங்கள் இளமைக்காலத்தை அர்ப்பணித்த பல ஆயிரக்கணக்கான போராளிகள் எதிரியிடம் சிக்கியிருக்க, புலத்தில் இருந்து கொண்டு கணணிப் புரட்சி செய்வதும், அந்தப் புரட்சியை தாயகத்துக்கு இறக்குமதி செய்யப்போவதாக சொல்லிக் கொள்வதும் “போராட்ட வியாபாரமே” அன்றி வேறில்லை.

போராட்டம் என்பது அரசியல் போராட்டமாக இருந்தாலும் சரி வெறெந்த வகையிலான போராட்டமாக இருந்தாலும் அதற்கான அடித்தளம் என்பது தாயகமேயாகும். தாயகத்திற்கு புலம் பின்பலமாக இருக்க வேண்டுமே தவிர, தாயகத்தை மேய்க்கும் மேய்ப்பாளனாக இருக்க முடியாது.