வெளித்தெரியா வெள்ளிகள் - 01
இதுவொரு காலத்தின் பதிவு. ஆங்கிலத்தில் நூலாக வெளிவரவிருக்கின்ற இப்பதிவின் தமிழ்ப்பதிப்பு தொடராக ஈழநேசனில் வெளிவருகின்றது. தமிழீழ விடுதலைக்காக புறப்பட்ட ஒருவனின் வாழ்க்கையோடு பயணிக்கும் இப்பதிவு - ஒரு சிறுமுயற்சியே. தாயகத்தமிழர்களின் வேதனைகளும் வலிகளும் அவர்களது தியாகப்பயணமும் இன்னும் தொடரும் நிலையில் வெளிவருகின்ற தொடர்பதிவு இதுவாகும். தமிழிலக்கிய பரப்பில் ஈழத்துபோராட்ட இலக்கியமும் முக்கியமானது என்ற வகையில் இதனை வெளியிடுகின்றோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
”அம்மா நான் ஒருக்கா லைப்ரரிக்கு போட்டுவாறன்” எனச்சொன்ன கீதன் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானான்.
”ஒரே வெயிலாக்கிடக்கு இப்ப என்ன அவசரம்” என்ற அம்மாவின் குரலுக்கு ”இல்லை பேப்பர் பாத்திட்டு வாறன்” என்றவன் சைக்கிளுக்கு காற்று இருக்கின்றதா எனப்பார்த்தான்.
”கொண்ணை இப்பதானே பேப்பர் வாங்கிக்கொண்டுவந்தவன்”.
”இல்லை நேற்றைய பேப்பர் ஒருக்கா பார்க்கவேணும். உடன வந்திடுவன்” என்று சொல்லியவாறே சைக்கிளில் ஏறிவிட்டான்.
”சரி அப்ப வரக்க, கடையில் சீனி அரை கிலோ வாங்கிக்கொண்டு வா. தேத்தண்ணி போடுறதுக்கு கூடு ஒண்டும் இல்ல” என அம்மா அவனது கையில் காசை திணித்தபோது, ”இல்லை பின்னேரம் வாங்கலாம்” எனச் சொல்லியவாறே சென்றான்.
அப்பிடி என்ன அவசரமாய் போறான் என நினைத்தவள், பின்னால கூப்பிடக்கூடாது என நினைத்தாள் போலும் பேசாமல் இருந்துவிட்டாள். அவனோடு இனிப்பேச பல வருடங்கள் ஆகும் என்பதை அவள் அன்று அறிந்திருப்பாளா?
அப்போது யாழ்குடாநாடு போர் மேகம் சூழ்ந்திருந்த நேரம். யாழ் குடாநாட்டின் தீவுப்பகுதிகளை கைப்பற்றிய இராணுவத்தினர் யாழ் குடாநாட்டை முழுமையாக கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
குடாநாட்டிற்கான வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்து பாதைகளும் முடக்கப்பட்டுவிட்டன. இப்போது பலாலி பெருந்தளத்திலிருந்து இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.
பாதுகாப்பான இடங்கள் எதுவும் இருக்கவில்லை. நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது குண்டுவீச்சு விமானங்கள் பதிந்தபோதும் அத்தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வளவு பெருந்தொகையில் மக்கள் குவிந்திருந்தார்கள். வீதிகள் நிரம்பியிருந்தன. ஆனாலும் அந்தக்கொடிய விமானங்கள் 200 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்றுபோட்டிருந்தது.
இனி ஒன்றும் செய்யமுடியாது என்பது தெரிந்து, ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தாம் வாழ்ந்த அம்மண்ணிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார்கள். இவனது நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு திசையில் பிரிந்து எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை.
பக்கத்துவீட்டு வேலி தங்கட காணிக்குள் சாய்ந்துவிட்டது என்பதற்காகவே வழக்கு போட்ட மக்கள் - தங்கள் மண்ணே பறிபோகின்றது என்று தெரிந்தும் ஒன்றும் செய்யமுடியாதவர்களாக வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.
வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இவனுக்கு முன்னால் ஒரு தெரிவே இருந்தது. அந்த வழியில் பயணிக்க கீதன் முடிவெடுத்திருந்தான். ஒன்றன்பின் ஒன்றாக படகுகள் இணைக்கப்பட்டு ஏறக்குறைய நானூறு பேர் பயணித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் அப்போதைய பயணத்தைப்போலவே தொடரப்போவதும் பெரும் சவாலானதுதான் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
கடற்பயணத்தை பாதுகாப்பதற்காக ”எங்கட பெடியள்” நிற்கிறார்கள் என்ற பாதுகாப்புடன் அப்பாதையால் மக்களும் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.
அந்தப்பாதையை காத்துநின்ற அந்த வீரர்கள் பற்றியும் அவன் அறிந்திருந்தான். ஆனால் தன்னோடு பயணிக்கும் தோழர்களும் அவ்வாறு தற்கொடையாளர்கள் ஆவார்கள் என்பது அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.
அது யாழ்குடாநாட்டை வன்னி பெருநிலத்திலிருந்து பிரித்த கடல் நீரேரி. அப்பாதையால் பயணிக்கும் எவரும் படையினரால் குறிவைக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை காப்பதற்காக காவல்தெய்வங்கள் கண்ணயராமல் கடலினில் நிற்பார்கள்.
அக்கடற்பாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக படையினர் மேற்கொண்ட ஒவ்வொரு கொடுமைகளும் அதனை எதிர்த்து அவர்கள் செய்த தியாகங்களும் மக்கள் மத்தியில் இனம்புரியாத தேசிய உணர்வை வளரச்செய்தது.
அம்மா அப்பா சகோதரர்கள் என அவர்கள் ஒன்றாக வாழ்ந்த காலங்கள் குறைவு. சிறுவயதிலே தொடர்ந்த இடப்பெயர்வுகள் அவனது குடும்பத்தையும் சிதறச்செய்தது. அதனால்தான் சேர்ந்திருந்த அந்தக்காலங்கள் காணாமல்போய்விடக்கூடாது என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. ஆனால் அவர்கள் அவனை விட்டு பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக தனது கடமையை அவன் உணர்ந்திருந்தான் போலும்.
காலைப்பயிற்சிகள் கடுமையாக இருக்கும். வெள்ளிக்கிழமை என்றால் இன்னும் கடுமையானதாக இருக்கும். காலையில் ஏழு மணிக்கு எழும்பியவனுக்கு பயிற்சிக்காலங்களில் நாலரை மணிக்கு ஊதும் விசில் பழகிப்போனது ஆச்சரியமானதுதான்.
போராட்டம் கடுமையானது. அதற்கு துணிவு தந்திரம் கடும்பயிற்சி தேவை. பயிற்சி ஆசிரியர்கள் திரும்ப திரும்ப கூறுவார்கள். அதனால்தானோ என்னவோ தன்னை மாற்றிக்கொள்ள அவன் விரும்பினான்.
இப்போது அவனாகவே கடுமையான சூழலில் வாழ விரும்பினான். காலையில் அகவணக்கம் செய்யும்போது திலீபனை பூபதி அம்மாவை கிட்டண்ணைாவை மனதில் நினைந்துகொள்வான். அவர்களை போன்ற உறுதியுடன் தானும் பயணிக்கவேண்டும என திடம்கொள்வான்.
காலை தொடக்கம் இரவு வரை கடும்பயிற்சி. இரவுகளில் தொடரும் உடனடி காப்பு பயிற்சி.
தன்னோடு நின்ற பல தோழர்கள் எவ்வளவு கடினப்பட்டு இதனை செய்கின்றார்கள் என்று எண்ணும்போது தானும் தனது பங்கை நிறைவுசெய்துவிடவேண்டும் என்ற துடிப்பு அவனிடம் இருந்தது.
மேஜர் ரஜீவன் அண்ணா தான் பயிற்சிமுகாம் பொறுப்பாளர். அமைதியான அந்த உருவத்திற்குள் அடங்கியிருந்த ஆளுமையை கண்டு பலதடவை வியந்திருக்கின்றான்.
பொதுவாழ்வுக்காக அர்ப்பணித்தவர்களின் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமானது என்பதை அவரோடு பழகினாலே அறிந்துகொள்ளமுடியும்.
போராளிகள் உண்மையானவர்களாகவும் நம்பிக்கையானவர்களாகவும் சமூகசிந்தனையுடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துவார்.
அவர் ஆனையிறவு ஆகாய கடல் வெளி சமரில் காயமடைந்திருந்தார். அதன் பின்னர் நிர்வாகப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். யாழ்குடாநாடு முழுவதுமாக அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட நிலையில் அங்கு சென்று சண்டை செய்யப்போவதாக கேட்டு தலைவருக்கு கடிதம் எழுதுவார்.
அவ்வாறு அனுமதிபெற்று யாழ்ப்பாணம் சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது - மாவீரர் நாளில் துயிலுமில்லத்தில் விளக்கேற்றவேண்டும் என்ற துடிப்போடு சென்று விளக்கேற்றிவிட்டு திரும்பிவரும்வழியில் வீரச்சாவடைந்திருந்தார்.
8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
கீதனது பயிற்சி முகாமில்தான் லெப்கேணல் சுபேசன் அண்ணனின் அணியும் தங்கி விசேட பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் கரும்புலிகள் அணியை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து அவர்களை நேரடியாகவே முதற்தடவையாக கண்டபோது தியாகத்தின் உச்சங்களின் முகங்களை தரிசித்தான்.
அவர்கள் ஆங்கில படங்களில் வருவது போன்றமாதிரியான பயிற்சிகளிலேதான் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். ஏழுபேர் கொண்ட அணியாக மட்டுமே அவர்களது பயிற்சி போய்க்கொண்டிருந்தது.
கீதனுடன் ஏறக்குறைய முன்னூறு பேரளவில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பயிற்சிகள் தொடக்கநிலைபயிற்சிகளாக மட்டுமே அவை அமைந்திருந்தன.
சிறப்பு பயிற்சிகள் பெற்றுக்கொண்டிருந்த சுபேசன் அண்ணனின் அணியோ எங்கோ விமானதளத்தை தாக்குவதற்கான பயிற்சிகளை பெற்றுக்கொண்டிருந்தார்கள். அது பலாலியா கல்குடாவா அல்லது திருமலையா என யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் பற்றி யோசிக்கமுடியாத காலம்.
ஆனால் பின்வந்த நாட்களில் ஆட்லறிதளம் ஒன்றை தாக்குவற்கான பயிற்சியாக மாற்றம் பெற்றது. அவர்களது பயிற்சிகள் அனைத்தும் ஒத்திகை பயிற்சிகளாகவே இருந்ததன. ஆனால் காலவோட்டத்தில் தாக்குதல் திட்டங்கள் மாறி இடங்கள் மாறிக்கொண்டேயிருக்கும்.
இவ்வாறு இலக்குகள் மாறி இடங்கள் மாறிக்கொண்டிருந்த போதிலும் தங்கள் விடுதலைக்கான விலையை மாற்றாமல் உறுதியாக நின்ற இவர்கள் சுமார் ஆறுவருட காத்திருப்புக்கு பின்னர் ஆனையிறவில் மூச்சடங்கிப்போனார்கள்.
ஓரு கணத்திலே வெடித்துப்போகின்ற இவர்களின் இறுதிக்கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத்தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக்கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.
”நான் கம்பிவேலியை உடைக்க வெடிக்கிறன். அந்தப்பாதையால் போய் நீங்கள் முதலாவது காவலரணில வெடியுங்கோ. மற்ற ஆட்கள் ஆட்லறியை வெடிக்கவைக்கலாம்” என தாங்களே திட்டமிட்டுகொள்ளும் இவர்களுக்குள் உள்ளே புகுந்துகொண்ட அந்த மனவுறுதி எப்படி அவர்களுக்கு உருவானது.

ஆனையிறவு ஆட்லறி தாக்குதலுக்காக திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது வரைபடத்தின்மீது இருந்துகொண்டு ”நான் இந்த பிப்ரி கலிபரை விடமாட்டன். அதை உடைக்கமுதல் அதை எடுத்து அவனுக்கே திருப்பி அடிப்பன்” மேஜர் ஆஷா சொன்னபோது அவனால் அவர்களை புரிந்துகொள்ளமுடியவில்லை.
வெடிப்பது சார்ஜரை இழுப்பது என இயல்பாக சொல்லும் இவர்கள் தங்கள் உயிரை பற்றி ஒருகணமேனும் சிந்திப்பதில்லை. ஏனென்றால் தாங்கள் வீரச்சாவு அடைவதற்கு முன்னர் எத்தனை எதிரிகளை கொன்றோம் எத்தனை எதிரியின் போர்த்தளபாடங்களை அழித்தோம் என்பதில்தான் அவர்கள் இலக்கு இருந்தது. அவர்களுக்குள் புதைந்திருந்த அந்த ஆன்மஉறுதியை கண்டு இவன் மெய்சிலிர்த்துப்போனான்.
யாழ் குடாநாடு இடப்பெயர்வின்போது வன்னிப்பெருநிலம் எங்கும் ஓலைக்குடிசைகளே நிரம்பிநின்றன. அடுத்தடுத்த இடப்பெயர்வுகளே எம்மக்களின் வாழ்வை அவலநிலைக்கு கொண்டுசென்றது.
ஓலைக்குடிசைகளில் ஆங்காங்கே தெரியும் உறவுகளை காணும்போது இவர்களுக்காக என்றாலும் நாம் போராடவேண்டும் என்ற உறுதி இன்னும் அதிகரிக்கும்.
ஆறு மணிக்குப்பின்னர் வீதியை மறித்து படுத்திருக்கும் அந்த ஊர் மாடுகள் வாகனங்களுக்கு வழிவிடாமல் தங்கள் பாட்டில் படுத்திருக்கும். இரவு வந்துவிட்டால் தங்களுக்கே வீதி சொந்தம் என எண்ணுகின்றன போலும்.
மாடுகளை பொதுவாக ஐந்தறிவுள்ள பிராணிகள் என சொல்ல கேள்விபட்டிருக்கின்றான். ஆனால் அவற்றுக்குள்ளே இருக்கின்ற ஒட்டுறவை கண்டு பிரமித்துப்போயிருக்கின்றான்.
ஒரு தடவை வழங்கல் சாப்பாடு சலித்துப்போன நிலையில் மாடு அடிப்போம் என கீதனுடன் இன்னும் மூன்றுபேர் வவுனியாவின் எல்லைப்புற கிராமம் ஒன்றுக்கு சென்றார்கள்.
அங்கு காட்டெருமைகள் என்று சொல்லக்கூடிய மாதிரி ஊர்மாடுகள் காடு ஏறி வாழ்ந்துவந்த நேரம் அது. ஒரு கூட்டம் மாடுகளை கண்டு அவற்றில் ஒரு நாம்பன் மாட்டை குறிவைத்து சுட்டான் கீதன். ”கீதன் நீ பக்கத்தில் நிண்ட மாட்டை சுட இந்த மாட்டுக்கு பட்டுட்டுதடா” என வேந்தன் நக்கலடித்தான்.
வேந்தன் எப்பவுமே கலகலவென்று எதையாவது சொல்லி மற்றவர்களை சிரிக்கவைத்துக்கொண்டிருப்பான். மேடைநிகழ்ச்சிகளில் எப்போதும் அவன் வந்ததாகவே ஞாபகம். அவனோடு சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்வை பின்னொரு பொழுதில் பார்ப்போம்.
அந்த மாடு சூடுபட்டு கீழே விழப்போனபோது ஒரு கணம் கிலி கொண்ட மாடுகள் சுதாகரித்து – கீழே விழுந்த மாட்டை கீழே விழாமல் தள்ளிக்கொண்டு செல்லமுயற்சித்தன. அதுமுடியாமல் போகவே அந்த மாட்டை விட்டுவிட்டு மற்றையவை காட்டுக்குள் ஓடின.
அதுவரை நாளும் மாடுகள் தானே நினைத்தவனுக்கு அந்நிகழ்ச்சி நெகிழ்ச்சியை உருவாக்கியது. மிருகங்களுக்குள் இருக்கும் அன்னியோன்னியம் கூட மனிதர்களுக்குள் இல்லாமல் போய்விடுகின்றதே.
விடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று. ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. இந்த முகவுரை விதுசா பற்றிய நினைவுப் பகிர்வை அறிமுகஞ் செய்யப் போதுமானது.






